Thursday, September 16, 2010

காசுமீரில் இந்தியாவின் நிறமும் கரமும்

காசுமீர் நாட்டு மக்கள் தெருவுக்கு வந்து கல்லால் அடித்து ராணுவத்தை விரட்டுகிறார்கள்.  ஏன்? எதற்கு? எப்படி?


பாக்கிசுதானின் நேரடி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்கொள்ள தேடிய வழி துணைக்கண்டத்தின் வஞ்சக ஆக்கிரமிப்பில் வந்து முடிந்தது. சரி எப்படி ஆனாலும் நிம்மதியாக இருந்தால் போதும் என்று மக்கள் நினைத்தார்கள்.


ஆனால் அரசியலை பிழைப்பாக கொண்ட சுயநல அரசியல்வியாதிகளும், இனம் மதம் மொழி நாகரீகம் பண்பாடு மற்றும் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கு அரசியலை ஒரு கருவியாக தெரிந்து கொண்ட திருடர்களும், காசுமீர் நாட்டு மக்களை பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு முடக்கியிருந்தார்கள்.


இப்போது மக்கள் விழித்துக் கொண்டார்கள், சுயநலவாதிகளும், அரசியல் திருடர்களும் தப்ப வழியின்றி, எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற நிலையில் வெட்கிப்போய் உள்ளார்கள்.


ஒரு முதல்வர் கேட்கிறார் காசுமீர் வன்முறைக்கு என்ன நிறம் என்று.  காசுமீர் வன்முறையின் நிறம் இந்தியாவின் நிறம் இரண்டும் ஒன்றுதான்.  காசுமீரில் ராணுவமும் தீவிரவாதிகளும் செய்ததுதான்  வன்முறை.  ஆனால் மக்கள் செய்வதற்குப் பெயர் புரட்சி.  அதற்கு நிறம் இல்லை, அது தூய்மையானது நிர்மலமானது. திட்டமிட்டு  கலவரத்தையும் மதவெறியையும் தூண்டிவிடுபவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்.


அமெரிக்க ஐக்ய மாநிலங்களின் தலைவர் திரு ஒபாமா சொல்வது போல் நாம் நினைத்த இடத்தில் ஒரு கிறித்தவ ஆலயத்தை கட்டுகிறோம் ஒரு யூத வழிபாட்டுத் தலத்தை நிர்மாணிக்கிறோம்.  அதைப்போல் ஏன் ஒரு மசூதியை விரும்பிய இடத்தில் நிறுவமுடியாது?  அப்படிச் செய்ய முடிவதுதான் நமது மக்களாட்சியின் பெருமையாக இருக்க முடியும் அதில்தான் அமெரிக்காவின் பெருந்தன்மையும் பலமும் நம்பிக்கையும் அடங்கியிருகிறது.

காசுமீரம் இந்தியாவின் மணிமகுடமாக இருந்தது. ஆனால் சுயநலவாதிகளுக்கும், திருட்டு அரசியல்வாதிகளுக்கும், அதன் மதிப்பும் பெருமையும் பலமும், தெரியவும் இல்லை புரியவும் இல்லை.

இப்போதும் அமெரிக்க ஐக்ய மாநிலங்கள் போல் துணைக்கண்டத்தின் அனைத்து நாட்டு / மாநில / இன மக்களுக்கும் சுயாட்சி / விடுதலை விருப்பம் புரிந்துணர்வு மற்றும் மரியாதை அங்கீகாரம் போன்ற நல்ல அளவு நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இணைந்திருந்தால் இந்தியா என்ற அமைப்பு பலமாகவும் வளமாகவும் இருக்கும்.


அப்படியில்லாமல் ஆக்கிரமிப்பிற்கும் சுரண்டலுக்கும் மட்டும் தேவையானதும் பயன்படுவதுமான தற்போதைய அமைப்பைப் பாதுகாத்தால் போதும் என்று நினைத்தால் நிலைமையை மக்கள் மாற்றும் காலம் விரைவில் வரும்.

Wednesday, September 1, 2010

கள்ளுண்ணாமை

௧.  மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

௨.  மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

௩.  கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

௪.  மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

௫.  ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

௬.  மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

நன்றி கலைஞரின் குறளோவியம்

மேலே வள்ளுவரின் வலிமையான திருக்குறளுக்கு கலைஞரின் வளமான தெளிவுரையைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

மிகவும் அழகாக கலைஞர் உரை விளக்குகிறது குடிப்பவ(ர்/ரை)

தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்.

அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது.

கலைஞர் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் மக்களுக்கு பயன் கொடுக்கிறது.  ஆனால் இந்த டாஸ்மாக் அவை எல்லாவற்றின் பயனையும் ஒன்றும் இல்லாமல் வீணாக்கி விடுகிறது.

எனவே மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினால் அது தமிழருக்கு நன்மையாகவும் கலைஞருக்குப் பெருமையாகவும் இருக்கும்.

எதிர்பார்ப்புடன் தமிழன் யோவான்.